search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிகார மனிதர்கள்"

    வைகரை பாலன் இயக்கத்தில் கிஷோர் - ஷெரின் பில்லக்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடிகார மனிதர்கள்' படத்தின் விமர்சனம். #KadikaraManithargalReview
    பிழைப்புக்காக ஊரில் இருந்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சென்னை வருகிறார் கிஷோர். ஊரில் வாழ வழியில்லாத இவருக்கு, சென்னையிலும் தங்க வீடு கிடைக்காமல் அல்லப்படுகிறார். கடைசியாக குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதாக கூறி, தனது கடைசி மகனை பெட்டிக்குள் வைத்து மறைத்து ஒரு வீட்டில் குடிபோகிறார்.

    பன் சப்ளை தொழில் செய்து வரும் கிஷோர், தனது மகனை வீட்டு உரிமையாளரான பாலா சிங்குக்கு தெரியாமல் பன் பெட்டியில் வைத்து, பள்ளிக்கு கூட்டிச் செல்கிறார். கிஷோர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கருணாகரன் பாட்டி ஒருவருடன் வசித்து வருகிறார். கருணாகரனுக்கும் வீட்டு உரிமையாளரின் மகளான நாயகி ஷெரின் பில்லக்களுக்கும் காதல் மலர்கிறது. 



    இந்த நிலையில், பாலா சிங் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை துவங்குகிறார். அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நாயகி ஷெரின் கருணாகரன் வீட்டில் தங்குகிறார். ஆனால் தனது மகள் ஓடிப்போனதாக கருதி ஷெரினை தேடி வருகிறார். இந்த நிலையில் கிஷோரின் கடைசி மகனும் காணாமல் போகிறார்.

    கடைசியில் கிஷோரின் மகன் கிடைத்தானா? கருணாகரன் - ஷெரின் இணைந்தார்களா? பாலா சிங்குக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

    கிஷோர் ஒரு நடுத்தர வீட்டு குடும்பஸ்தராக கடிகார மனிதனாக தினசரி வேலையை கவனித்து வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன் காமெடியில் சிரிக்க வைக்கிறார். ஷெரினுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி பாலாசிங், பிரதீப் ஜோஷ், ஷீலா கோபி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையடைய வைத்திருக்கின்றனர். 



    சென்னையில் வீடு தேடுவதில் இருக்கும் சிக்கல், வீடு கிடைக்காமல் கஷ்டப்படும் குடும்பங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் வைகரை பாலன். அடுத்தடுத்த காட்சிகள் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். 

    சாம்.சி.எஸ் பின்னணி இசை ஓரளவுக்கு வலுகூட்டியிருக்கிறது. உமா சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `கடிகார மனிதர்கள்' போராட்டம். #KadikaraManithargalReview

    ×